* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் – நீங்க தான் சார் முன்னூதாரனம்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

க.நா.2 : வணக்கம் சார். நான் தான் ___________
நான் : (அவர் பெயரை சொல்லி முடிக்கவும்) வாங்க வாங்க. நானே உங்கள வந்து பாக்கனும்னு நிசச்சேன். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு எல்லாமே நீங்க தான் சொன்னாங்க. அப்படித்தானே

க.நா.2 : (முகம் பிராகசமாகிறது) பிரெசிடென் எங்க சித்தப்பாதான். ஆனா அவரு வியாபாரத்த பாத்துக்கிறார். யூனியன் ஆபிஸ் (ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலைகள்) எல்லாம் நாந்தான் பாத்துக்கிறன்

நான் : சொன்னாங்க. நீங்க நினைச்சா இங்க நடக்காதது ஒன்னுமில்லன்னு சொன்னாங்க
க.நா.2 : நாஞ்சொன்னா யாரும் தட்டமாட்டாங்க

நான் : (அலுவலக உதவியாளரிடம்) பி.ஈ.ஈ. சார் ஆபிஸ்ல இருக்கார். அவரை கூப்பிடுங்க. அப்படியே பார்மஸில (மருந்தகம்) இருந்து இரண்டு சேர் எடுத்து போடுங்க

க.நா.2 : ????
நான் : சார் நீங்க உட்காருங்க. உங்க கிட்ட நிறய பேசனும்

அவர் வரவும். “வாங்க பி.ஈ.ஈ சார். உட்காருங்க” என்று அவரையும் அமர வைத்தாகிட்டது

பொது சுகாதார துறையில் ட்டார விரிவாக்க ல்வியாளர் என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒருவர் இருப்பார். இவரை வ.வி.க என்று அழைப்போம். இந்த பதவியை ஆங்கிலத்தில் Block Extension Educator என்று அழைப்பார்கள். பல மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமர்ந்து டேரா போடும் நமது க.நா.2ஐ எப்படி கையாள்வது பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்ட போது, இவர் அளித்த திட்டம் சிறந்தது என்று தோன்றவே அதை செயல்படுத்தினோம். அதைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

-oOo-

(தற்சமயம் இப்பதிவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணி புரியும் புது மருத்துவர்களும் படிப்பதால்) கதைக்கு நடுவில் சிறு மேலாண்மை வகுப்பு

எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் யார் என்றாலும், அவர்கள் என்ன பதவி என்றாலும் அவர்களின் பதவியுடன் சார் / மேடம் / சிஸ்டர் (செவிலியர்களை) சேர்த்தே அழைப்பது என் வழக்கம். ”எச்.ஐ சார்”, ”சி.எச்.என் சிஸ்டர்” , ”டிரைவர் சார்” என்று தான் அழைப்பேனே தவிர பெயர் சொல்லி அல்ல. (அலுவலக ரீதியாக நான் பெயரை மட்டும் சொல்லி அழைப்பது நன்கு பழக்கமான கல்லூரியில் உடன் பயின்ற மருத்துவர்களை மட்டும் தான்)

பல அரசு / தனியார் துறைகளில் / நிறுவனங்களில் வயதில் மூத்தவர் பெரிய பதவிக்கு

  • படிப்பு காரணமாக, அல்லது
  • திறமை காரணமாக, அல்லது
  • அது அவரின் தந்தை / மாமனாரின் நிறுவனம் என்பதால் !!

வருவது நடைமுறையில் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சி தான்.

ஆனால் இதில் சிக்கலகளும் அன்றாடம் நிகழ்கிறது. இதில் பெரும்பாண்மையான சிக்கல்களுக்கு காரணம், வயதில் மூத்தவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்காதது தான்.

  • முக்கியமாக தனக்கு கீழ் பணிபுரியும் வயதில் மூத்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது.
  • அடுத்ததாக தான் உட்கார்ந்து கொண்டு நிற்க வைத்து பேசுவது

நான் இந்த இரு விஷயங்களையும் தவிர்த்தால் தான் இன்று வரை என் பழைய பணியிடங்களில் (3 வருடம் முன் பணிபுரிந்த இடங்கள் உட்பட) நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு (உதாரணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புது கட்டிடம் திறப்பு, அல்லது பணியாளர் வீட்டு திருமணம் / பிற விசேஷங்கள்) அழைப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.

அலுவலில் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க / ஆதிக்கம் செலுத்த Reward Power, Coercive power, legitimate power, informational power, referent power, expert power என்ற பல இருக்கின்றன. அனால் இதை எல்லாம் விட்டு விட்டு கிழ் பணிபுரிபவர்களை நிற்க வைத்து பேசுவது, மரியாதை இல்லாத தோனியில் பெயர் சொல்லி அழைப்பது, விரலை நீட்டி பேசுவது என்று தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்பவர்களை பார்த்தால் எனக்கு சில நேரங்களில் எரிச்சல் வந்தாலும் பல நேரங்களில் (இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்களே, என்று திருந்த போகிறார்களோ என்று) பரிதாபம் தான் வரும்.

அதில் சிலர் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இது போன்ற சேட்டைகளை (அதனால் அதில் மிகப்பெரிய நஷ்டம் காத்திருக்கிறது என்பதை அறியாமல்) எல்லாம் செய்வார்கள். அதாவது வாடிக்கையாளர் இவரை பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்று. அதன் பிறகு அடுத்த முறை அந்த பணியாளர் மூலம் வாடிக்கையாளருக்கு செல்லும் செய்தியின் மதிப்பு குறைவுதான் என்பதை பலர் அறியவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பொது மக்கள் முன்னிலையில் அவர் கீழுள்ள பணியாளரை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அந்த பணியாளர் அடுத்த முறை களப்பணிக்கு ஊருக்குள் செல்லும் போது அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும். ?? அதனால் பாதிக்கப்படுவது துறைப்பணி தானே ?? கடைசியில் யார் தலையில் அது வந்து விழும் என்று ஊகிப்பது சிரமமா ??

இது அனைத்து அலுவலகங்கள் / துறைகளுக்கும் பொருந்தும்

-oOo-

நான் : சார் இவர் நம்ம ஊர் பஞ்சாயத் பிரசிடென்ட். (அவர் தலைவர் இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்)
வ.வி.க : ஆமாம் சார். சாருக்கு நம்ம ஊருல மட்டுமல்ல. இங்க எல்லா ஊருலயும் நல்ல செல்வாக்கு
க.நா.2 : (பெருமை வழிகிறது)

நான் : நான் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆஸ்பத்திரி விசயம்னா இவர்தான் முதல்ல நிப்பாருன்னு.
வ.வி.க : ஆமாம் சார். பாதி நேரம் இங்கதான் இருப்பார்.
க.நா.2 : இது முக்கியமான விசயம்ல சார். அதான் நான் இதுல அதிகம் அக்கரையாஇருக்கேன்.

நான் : அதான் நாங்களே உங்கள பாக்க வரனும்னு நினச்சோம். ஆமாம் பசங்களாம் என்ன படிக்கிறாங்க
க.நா.2 : மூத்தவன் நான்காப்பு. (நான்காவது வகுப்பு) அடுத்த பொன்னு ஒன்னாப்பு (முதல் வகுப்பு) இப்ப மூனாவதும் பொன்னுதான். 4 மாசம் ஆகுது

நான் : நீங்க ஏன் உங்க வீட்ல குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது.

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.(குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)
க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா

நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??

தொடர்ந்து வாசிக்க…

பின் குறிப்பு : தற்சமயம் இதை விட சுவாரசிமான சரித்திர தொடர்களை நர்சிம், இளையபல்லவன், ஆகியோர் எழுதி வருகிறார்கள். அதே போன்ற சுவாரசியமான ஆய்வு தொடர்களை வாசிக்க ரத்னேஷ் (பகவத் கீதை), முரளி கண்ணன் (சினிமா), வக்கில் ராஜதுரை (சட்டம்) ஆகியோரின் பதிவுகளுக்கு செல்லுங்கள்.