எலும்புநாண், எலும்புநார், தசைநார், தமணி, சிரை, நரம்பு, இரத்தக்குழாய்

நரம்பு துண்டாகி இரத்தப்போக்கு ஏற்பட்டு வாலிபர் பலி என்று இந்த செய்தியில் தவறாக உள்ளது
கிணற்றில் இருந்து நீரை எடுக்கவேண்டுமென்றால் கயிற்றில் வாளியை கட்டி எடுக்கலாம்.
அல்லது ஓடி (மோட்டார்) மூலம் எடுக்கலாம். அப்படி ஓடி (மோட்டார்) மூலம் எடுக்கும் போது நீர் வர ஒரு குழாய் தேவை. அத்துடன் ஓடிக்கு மின்சாரம் கொண்டு வர கம்பி (வயர்) தேவை
 
-oOo-
 
Bruno's Tweet on Nerve Vein Artery
Bruno’s Tweet on Nerve Vein Artery

இதே போல் நமது உடம்பில் சில உறுப்புகள் உள்ளன. எலும்புகளை எலும்புடன் சேர்க்கும் எலும்புநாண் / எலும்புநார் (Ligament)

 
எலும்புகளை தசையுடன் சேர்க்கும் தசைநார் (Tendon)
 
இரத்தத்தை கொண்டு சேர்க்கும் இரத்தக்குழாய்கள் (Blood Vessels)
 
உறுப்புகளில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்பும், மூளையில் இருந்து உறுப்புகளுக்கு செய்திகளை அனுப்பு நரம்புகள் (Nerves)
 
-oOo-
 
இதில் இரத்த குழாய்கள் என்பது இருவகைப்படும்
 
இதயத்தில் இருந்து பிற உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமணிகள் (Arteries)
 
பிற உறுப்புகளில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் சிரைகள் (Veins)
 
-oOo-
 
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நாம் திரவங்களை ஏற்றுகிறோம் அல்லவா. அதற்கு நாம் பயன்படுத்துவது சிரைகளை (Veins). இரத்தம் ஏற்ற வேண்டும் என்றாலும் சிரைகள் மூலம் தான் ஏற்றவேண்டும். அதே போல் ஊசியில் மருந்து செலுத்தும் போதும் சிரைகளில் செலுத்தலாம். இதை சிரை வழி திரவம், (Intravenous Infusion) சிரை வழி ஊசி / சிரையுள் ஊசி, சிரைவழியாக ஊசி, சிரையக ஊசி (Intravenous Injection or IV Injection) என்று அழைப்பார்கள்.
 
தசைகளில் (தோளில், பிட்டத்தில்) போடப்படும் ஊசி தசையுள் ஊசி (Intra muscular Injection or IM Injection).
 
தோலுக்கு அடியில் போடப்படும் தோலடி ஊசி (Subcutaneous Injection or SC Injection)
 
தோலுக்குள் போடப்படும் ஊசியும் உண்டு (Intradermal)
 
-oOo-
 
இன்று நாம்
எலும்புநாண் / எலும்புநார்
தசைநாண் / தசைநார்
தமணி
சிரை
நரம்பு
என்று பிரித்து சொன்னாலும்
ஒரு காலத்தில்
இவை அனைத்தையும் நரம்பு என்றே அழைத்தார்கள்.
 
இந்த பிரச்சனை தமிழில் மட்டுமல்ல, கிரேக்க மொழியிலும், இலத்தீன் மொழியிலும் இதே போல் தான் இருந்துள்ளது
 
The Greek word neuron was used to designate a tendon, but also a nerve, ligament and vein.
 
Latin expression nervus designated a muscle, a tendon, a nerve or something formed from tendons (Oxford Latin Dictionary, 1968)
 
Latin Nervus; Greek Neuron; Tamil Narambu நரம்பு all three used to denote Nerves, Veins, Tendon, Ligament
 
-oOo-
 
எனவே சிரைவழி ஊசிகளை நம் மக்கள் நரம்பூசி என்றே அழைத்தனர்.
 
முன்னோர் தான் முட்டாள் இல்லையே, பிறகு நாம் ஏன் அதை மாற்றவேண்டும், அப்படியே தொடர்ந்து அழைக்கக்கூடாது என்று கேள்வி எழுகிறதா ?
 
இதற்கு பதில் உள்ளது
 
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிரை வழி ஊசிகள் மட்டுமே போடப்பட்டு வந்தன. எனவே நரம்பூசி என்று அழைத்தாலும் கூட அது சிரைக்குள் செலுத்துவதை மட்டுமே குறித்தது.
 
ஆனால்
அறிவியல் வளர வளர
தமணிக்குள்ளும் ஊசிகளை செலுத்தும் பழக்கம் வந்தது. முக்கியமாக புற்று நோய் சிகிச்சையில் இது 1950களில் இருந்தே பயன்பாட்டில் உள்ளது (Klopp CT, Alford TC, Bateman J, Berry GN, Winship T. Fractionated intra-arterial cancer; chemotherapy with methyl bis amine hydrochloride; a preliminary report. Ann Surg. 1950;132:811–32 & Bonner CD, Thurman A, Homburger F. A critical study of regional intra-arterial nitrogen mustard therapy in cancer. Ann Surg. 1952;136:912–8)
 
அதே போல்
நரம்புகளை சுற்றி மருந்து செலுத்தும் பழக்கமும் உள்ளது. அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்க போடுகிறார்கள் அல்லவா. அந்த ஊசியை நரம்புகளை சுற்றி செலுத்துவார்கள். இதை மரத்து போகும் ஊசி என்றும் அழைப்பார்கள். ஸ்பைனல் அனஸ்தீசியா என்பதும் இந்த வகைதான்
 
எனவே இன்றைய தேதியில்
நரம்பூசி என்பது வேறு
தமணியுள் ஊசி என்பது வேறு
சிரையுள் ஊசி என்பது வேறு
 
எனவே
இனியும் சிரைவழி திரவங்களையும், சிரையுள் ஊசியையும் “நரம்பூசி” என்று பொதுவாக அழைப்பதை தவிர்க்கலாமே
 
-oOo-
நரம்பு துண்டாகி இரத்தப்போக்கு ஏற்பட்டு வாலிபர் பலி என்று இந்த செய்தியில் தவறாக உள்ளது
நரம்பு துண்டாகி இரத்தப்போக்கு ஏற்பட்டு வாலிபர் பலி என்று இந்த செய்தியில் தவறாக உள்ளது
நரம்பு துண்டாகி இரத்தப்போக்கு ஏற்பட்டு வாலிபர் பலி என்று இந்த செய்தியில் தவறாக உள்ளது
 
தமணி துண்டாகி அல்லது சிரை துண்டாகி என்று எழுதியிருக்கவேண்டும். தமணியா, சிரையா, எது பிரச்சனை என்று தெரியாவிட்டால் ”இரத்தக்குழாய் துண்டாகி என்று எழுதியிருக்கலாம்” இப்படி எழுதுவது பிழை
 
 
#OrganicEugenics