* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் – மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்

ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.

நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து வந்தேன். மேலும் கல்லூரி காலங்களில், வினாடிவினா, இசை, போன்ற பல போட்டிகளுக்கு சென்று வந்ததால் கொஞ்சம் தைரியம் அதிகம்.
சரி, என்னதான் நடக்கும், பார்த்துவிடுவோம் என்ற தைரியத்துடன் சென்று பணியேற்றுவிட்டேன்.

செல்லும் போதே அரசு பணியில் இருந்த மூத்தமருத்துவர்களில் (சீனியர்களிடம்) அவர்களின் அனுபவத்தை கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்கள் இது போன்ற சூழ்நிலைகளில் கடைபிடித்த நடைமுறைகளை பகிர்ந்து கொண்டனர். என்ன பிரச்சனைகள் அங்கு உள்ளன, தொல்லை தருபவர்கள் யார் போன்ற விபரங்களை விசாரித்து, அதை எல்லாம் எனக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த மருத்துவர்களிடம் கூறி அவர்கள் ஆலோசனையுடனே சென்றேன்.

ஆரம்ப சுகாதாரத்தில் பணியேற்று ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது. அதன் பின் ஒரு நாள் காலையில் நம்ம கதாநாயகன் (இவரை க.நா.1 என்று அழைப்போம்) வந்தார். நான் புறநோயாளி பகுதியில் அமர்ந்து பிணியாளர்களை பரிசோதித்து கொண்டிருந்தேன். (இந்த குறிகளுக்கு உள் இருப்பது பேசப்பட்டது அல்ல)

க.நா.1 : வணக்கம் சார். நான் தான் ___________ நம்ம ஊரில் உள்ள _______ நற்பணி மன்றத்தின் செக்ரட்டரியா இருக்கேன்

நான் : வணக்கம். சொல்லுங்க

க.நா.1 : நீங்க புதுசா வந்துருக்கீங்கன்னு சொன்னாங்க. பாக்க வரனும்முன்னு நினைச்சேன். கலெக்டராபீசில வேலை. (வேற என்ன. மனு கொடுப்பது தான்) அதான் வர முடியல. நேத்து கூட கலெக்டர்ட பேசிட்டுத்தான் வரேன் (திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு நீதி நாள் நடக்கும். யார் வேண்டுமென்றாலும் மாவட்ட ஆட்சித்தலைவரை சென்று பார்க்கலாம். நேரில் மனு அளிக்கலாம். குறைந்தது 250 முதல் 300 பேர்கள் வரை அளிக்கும் மனுக்களை வாங்கி அனைவரிடமும் புன்னகைப்பது என்பது இ.ஆ.ப வேலையின் ஒரு பகுதி)

நான் : சொல்லுங்க. என்ன விஷயம். நானும் உங்களை பாக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன்
க.நா.1 : நம்ம பின்னாடி ஒரு 400 பசங்க இருக்காங்க. உங்களுக்கு என்ன ஹெல்பு வேணும்னாலும் கேளுங்க. கண்டிப்பா பண்ணலாம். நம்மாள முடியாததுன்னு ஒன்னுமே கிடையாது

நான் : நான் சொல்ல வந்ததும் இதுதான். இந்த ஆஸ்பத்திரி (ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆஸ்பத்திரி என்று தான் கிராமப்புறங்களில் அழைப்பது வழக்கம்) கட்டி 30 வருஷத்திற்கு மேல ஆச்சு
க.நா.1 : ம்ம்ம்

நான் : ஆனா பாருங்க ஒரு காம்பவுண்ட் கூட கிடையாது.
க.நா.1 : ஆமா சார். யாருக்குமே அக்கரை கிடையாது

நான் : அதான். நீங்க ஒரு காம்பவுண்ட் கட்டி தரலாம்ல
க.நா.1 : ……. (திருட்டு முழி முழிக்கிறார்) (வாயா வா.. இப்படி உன்னை முழிக்க வைக்கத்தானே 2 வாரம யோசித்து ஒரு திட்டத்துடன் வந்தேன்)

நான் : நீங்க வராட்டா கூட நானே உங்கள வந்து பாக்கலாமுன்னு இருந்தேன். சாயாங்காலம் சர்வேயர வரச்சொல்லி இருக்கேன். அவர் வந்து அளந்து ”பொழி” (நில அளவு குறித்த வட்டார வழக்கு) பாத்து குச்சி அடிச்சிட்டாருன்னா (நிலம் அளந்த பின், அந்த எல்லை தெரிய சிறு மரக்குச்சிகளை நிலத்தில் நட்டி வைப்பது) நீங்க வேலை ஆரம்பிச்சிரலாம்

க.நா.1 : அது சரி சார், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு நாங்க எப்படி காம்பவுண்ட் கட்ட முடியும். அது கவர்மெண்ட தானே கட்டனும். நான் வேனும்னா நம்ம கலக்டர் சார்ட பேசட்டா (வேறு ஒன்றும் இல்லை. அடுத்த திங்கள் மனு அளிப்பது தான்)

நான் : பேசுங்க. ஆனா அது பெரிய விஷயம். கலெக்டர் சார் அதை சென்னைக்கு அனுப்பி, அது பல இடங்களுக்கு போகும். உடனே வேலை நடக்காது

க.நா.1 : இல்லை . நாங்க கட்டி தந்தா அத கவர்மெண்ட ஒத்துக்காதே (புத்திசாலி என்று நினைப்பு !!!)

நான் : அதெல்லாம் இல்லை. யார் வேண்டும்னாலும், நிலம், கட்டிடம், உபகரணங்கள், வாகனங்கள் நன்கொடை தரலாம். நீங்க காம்பவுண்ட் சுவர் கட்டித்தாரீங்க அவ்வளவுதான்

க.நா.1 : சரி சார். நான் யோசித்து விட்டு சொல்றேன்

நான் : என்ன சார் யோசிக்க இருக்கு. உங்க ஊர். உங்க ஆஸ்பத்திரி. நீங்க தான் ஊரில பெரிய மனுஷன் (அப்படி போடு அருவாள) நீங்க கட்டாம யார் கட்டுவா காம்பவுண்ட. அதுவும் உங்க பின்னாடி 400 பேர் வேற இருக்காங்க

க.நா.1 : …..(மீண்டும் திருட்டு முழி)
நான் : என்ன யோசனை.
க.நா.1 : நான் நம்ம பசங்க கிட்ட கேட்டுகிட்டு சொல்றேன் சார்

நான் : சரி. கேட்டுக்கோங்க. சாயங்காலம் 4 மணிக்கு வாங்க. சர்வேயர் வரார்
க.நா.1 : இல்ல இல்ல…. அவர பெரகு வரச்சொல்லுங்க. நான் மத்தவங்கிட்ட கேட்டுகிறேன்

நான் : சரி கேட்டுக்கோங்க

அதன் பிறகு ஒரு வாரம் நிம்மதியாக கழிந்தது.

ஒரு வாரம் கழித்து நம் கதாநாயகன் வந்தார். கூடவே நாலைந்து பேர். (தனியா வந்து பேசத்தெரியாம மாட்டிய அனுபவம் போலிருக்கிறது)

க.நா.1 :சார், நம்ம பசங்க கிட்ட எல்லாம் பேசுனோம். அவங்க காம்பவுண்ட் கட்ட பணம் நிறைய ஆகுமுன்னு சொல்றாங்க

நான் :கண்டிப்பா ஆகும். ஆனா உங்களால முடியாததா. நீங்க தான் இந்த ஊர்ல பெரிய மனுசன்னு சொன்னாங்க. எப்பவும் ஆஸ்பத்திரிலேயே இருக்கீங்க. நீங்க தானே பண்ணனும், நீங்க தனியாவா பண்ணுறீங்க. இவங்கல்லாம் இருக்காங்கல தனியா பண்ணிணாதான் கஷ்டம். இவங்களும் உங்க கூட தானே இருக்காங்க (கூட வந்தவர்கள் பார்த்த பார்வையிலிருந்து அடுத்த முறை அவர்கள் துனைக்கு வரமாட்டார்கள் என்று தெரிகிறது)

க.நா.1 :அது வந்த வெள்ளாம சரியில்ல. (வயல் விளைச்சல் சரியில்லை) அதான் பணம் புரட்டுறது கொஞ்சம் கஸ்டம். நாம வேணும்முன்னா அடுத்த வருசம் பாக்கலாமே

நான் :என்னங்க நீங்க. நீங்க தானே முக்கியமான ஆளு. நீங்க பண்னாம யாரு பண்ணுவா. இப்படி சொன்னா எப்படி

இதற்குள் அவர்களுக்குள் சைகை காட்டி வெளியில் சென்று விட்டனர். நான் மேலும் சில நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தனர்

க.நா.1 :சார், நம்ம பசங்க என்ன சொல்றாங்கனா, காசு கொடுக்கிறது கஷ்டம். ஆனா ஆஸ்பத்திரிக்காக வேலை எவ்வளவு வேணும்மினாலும் பாக்கலாம். என்னயா, நான் சொல்றது கரெக்டா

அனைவரும் வேக வேகமாக தலையாட்டுகிறார்கள்

நான் :உங்களாக தினமும் எவ்வளவு நேரம் இங்க இருக்க முடியும்

அனைவரின் முகத்திலும் “பல்பு” எரிகிறது. பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரச்சனை பண்ணுவது தானே அவர்களின் முக்கிய வேலை

க.நா.1 : மத்தியானம் பூரா இங்கதான் சார் இருப்போ்ம்
நான் :சரி அப்ப நீங்க காசு தர வேண்டான். ஒரு வேள பாத்தா போதும்

க.நா.1 :சொல்லுங்க சார் என்ன வேலை
நான் : வானம் தோண்டுறது தான் (கட்டிடங்களின் அஸ்திவாரத்திற்காக நிலத்தில் குழி தோண்டுவது)

மெதுவாக திகைத்து பராக்கு பார்த்தவர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்

க.நா.1 :??
நான் :சர்வேயர கூப்பிடு பொழி பாத்து குச்சி அடிச்சிரலாம். நீங்க எப்ப இங்க வர்றீங்களோ அப்ப கொஞ்ச கொஞ்சமா தோண்டுனா போதும்

க.நா.1 :கல், சிமெண்ட் எல்லாம்
நான் :வானம் தோண்டி அத போட்டோ எடுதது அனுப்புனா , ஸ்டெர்லைடுல அல்லாட்டி ஸ்பிக்ல கல் வாங்க காசு தருவாங்களாம். அத் வச்சு கட்டிறலாம் (ஸ்டெர்லைட், ஸ்பிக் ஆகியவை அங்குள்ள தனியார் நிறுவனங்கள்)

க.நா.1 கூட வந்தவர்களில் ஒருவர் : அப்ப நாங்க தான் தோண்டனுமா
நான் : (எலி பொறியில் மாட்டியது என்று தெரிந்தவுடன்) இத பாருங்க. நீங்க உங்க வேலய போட்டுகிட்டு ஆஸ்பத்திரிக்கு வேல பாக்க வேணாம். மத்தியாணம், வேல் இல்லாட்ட ஆடு புலி ஆடுற நேரத்துல கொஞ்சம் மம்மட்டி, கடப்பாற புடிச்சா ஒரு 3 வாரத்துல முடிச்சிரலாம். . கொஞ்ச எல்லாரும் வாங்க காட்றேன்

என்று கூறி அப்படியே சுகாதார நிலைய கட்டிடத்தின் வெளிப்புறம் அழைத்து சென்று “அங்கிருந்து இது வரை” “இதிலிருந்து அது வரை” என்று காட்டினேன்.  அந்த வளாகத்தின் மொத்த அளவு 10 ஏக்கர். அப்படி என்றால் சுற்று சுவர் கட்ட வேண்டிய நீளம் எவ்வளவு பெரிது என்று எண்ணிக்கொள்ளுங்கள். சுட்டியை சுட்டினால் உங்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலைத்தையும் அதன் அருகிலுள்ள பிற இடங்களையும் வானிலிருந்து உங்களுக்கு பிடித்தமான உயரத்தில் இருந்து காணலாம்

அப்படியே அவர்களை பின்னால் அழைத்து சென்று சமையல் மற்றும் நீர் தொழிலாளியிடம் சென்று (cook cum washer woman) ”இவங்களாம் நம்ம ஆஸ்பத்திரிக்கு காம்ப” என்று வார்த்தையை முடிக்கும் முன்னர்….ஒருவர் குறுக்கிட்டு “இல்லை இல்லை. வானம் தான் தோண்டுறோம்” என்று அவசரமாக கூறி்னார்

நான் :அதான் இவங்க எப்ப வந்தாலும் அந்த கடப்பாரயும் மம்மட்டியும் கொடுத்துருங்க (கடப்பாரை, மண்வெட்டி)
சமையல் மற்றும் நீர் தொழிலாளி :(அரண்டுபோய்) சரி சார்

க.நா 1 : சரி சார், எனக்கு மணியாச்சில ஒரு சோலி இருக்கு. போயிட்டு வந்துட்றேன் (நீங்கள் திருநெல்வேலி, நாகர்கோயிலுக்கு தொடர்வண்டியில் செல்லும்போது வருமே அதே வாஞ்சி மணியாச்சிதான்)
நான் : சரிங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. என்ன பாக்க வேண்டாம். நீங்களே வேலைய ஆரம்பிக்கலாம்

அதன் பிறகு அந்த கூட்டத்தை நெடுநாள் கழித்தே பார்த்தேன் என்றும் அதுவும் அவர்களுக்கு எதாவது உடல் நலக்குறைவு என்றால் மட்டுமே வந்தனர் என்றும் சொல்லவும் வேண்டுமா.

ஆரம்ப சுகாதார நிலையமும் எந்த பிரச்சனையும் இல்லாம்ல் சென்று கொண்டிருந்தது. இப்படியாக ஒரு கும்பலை விரட்டிய செய்தி மெதுவாக பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதற்கும் நண்பர்களுடன் கூடி பேசி (அடுத்த கும்பலை பற்றிய விபரங்களை சேகரித்து) அவர்களுக்கு ஏற்ற மேலும் சில திட்டங்களை த்யாரித்து வைத்திருந்தோம்

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

தொடர்ந்து வாசிக்க…