தகவலா ? கருத்தா? ஆசையா? விருப்பமா? நம்பிக்கையா?

சமூக ஊடகங்களில் நீங்கள் எழுதப்போவது தகவலா, கருத்தா, ஆசையா, விருப்பமா, நம்பிக்கையா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்
• தகவல் (Fact) வேறு
• கருத்து (Opinion) வேறு
• ஆசை / விருப்பம் (Wish / Desire) வேறு
• நம்பிக்கை (Belief) வேறு

தகவல் என்பது உண்மை.

யார் சொன்னாலும் அது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். உங்கள் தகவலும் என் தகவலும் வேறு வேறாக இருந்தால் இருவரில் ஒருவர் தவறு.
• உதாரணமாக இந்தியா 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது என்று தான் நானும் சொல்ல முடியும் நீங்களும் சொல்ல முடியும். உங்களுக்கு இந்திய அணி பிடிக்கவில்லை என்பதால் நீங்கள் இந்தியா வெல்லவில்லை என்று மாற்றி சொல்ல முடியாது. அப்படி சொன்னால் நீங்கள் சொல்வது பொய். அது உண்மைத் தகவல் அல்ல

தகவல் என்பது
• அறிவு (Knowledge) சார்ந்து இருக்கலாம்
• விஷயம் (Information) சார்ந்து இருக்கலாம்
• தரவு (Data) சார்ந்து இருக்கலாம்

உதாரணமாக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் வென்றார் என்பது தகவல். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. அதே போல் 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் என்பது சரியான தகவல். 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் என்பது பொய்.

கருத்து என்றால் என்ன ?

கருத்து என்பது, ஒரு துறையில் நிபுணராக இருக்கும் நபர் கூறும் கூற்று அல்லது அறிக்கை.

ஒரே விஷயத்தில் இரு நபர்களுக்கு வெவ்வேறு கருத்து இருக்கலாமா ? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருக்கும் இரண்டு கருத்துக்களும் (அந்த நபர்களின் படிப்பின், அனுபவத்தின், திறமையின் அடிப்படையில்) சரியாகவும் இருக்கலாம்

உதாரணமாக முதலாம் வருடம் மருத்துவம் படிக்கும் மாணவர் ஒருவர் ஒரு கண்ணை பார்த்து விட்டு அந்த கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறலாம். அதே கண்ணை கண் மருத்துவத்துறை பேராசிரியர் பார்த்து விட்டு அதில் கண்புரை ஆரம்ப நிலையில் உள்ளது என்று கூறலாம். இரண்டுமே சரி தான்.

அது எப்படி ஒரே கண்ணை பார்த்து விட்டு ஒருவர் அதில் பிரச்சனை இல்லை என்றும் மற்றொருவர் அதில் பிரச்சனை உள்ளது என்றும் கருத்து கூறலாம் ? அது எப்படி இரண்டுமே சரியான கருத்தாக இருக்கலாம் என்றும் நீங்கள் கேட்டால், அதற்கு பதில் கருத்து என்பது, படிப்பு, அறிவு, ஞானம், அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது. எனவே அதில் மாறுபாடு இருக்கும்

ஆனால் முழுவதும் புரை உள்ள ஒரு கண்ணை பார்த்து விட்டு முதல்வருட மாணவர் அந்த கண்ணில் பிரச்சனை இல்லை என்று கூறினால் அது பிழை.

ஆரம்ப கட்ட பார்க்கின்சன் நோயுடன் வருபவரை பயிற்சி மருத்துவர் ஒருவர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு இருக்கும் நரம்பியல் நிபுணர் கண்டு பிடித்து விடுவார். இதில் யாருமே பிழை செய்யவில்லை. ஆனால் இப்படி வருபவரிடம் நோயில்லை என்று சொன்னால் அது தான் பிழை

மற்றொரு உதாரணம் கூறுகிறேன்

கடுமையான புயல் அடிக்கிறது, மழை பெய்கிறது, விமான ஓடுதளத்தில் விளக்குகள் சரியாக செயல்படவில்லை. 20 வருட அனுபவம் உள்ள ஒரு விமானி, விமானத்தை ஓடு தளத்தில்சரியாக இறக்கி விடுகிறார். ஆனால் 1 வருட அனுபவம் உள்ள விமானி இறக்கும் போது விமானம் ஓடுதளத்தை தாண்டி சென்றுவிடுகிறது. இந்நிலையில் நீங்கள் 1 வருட விமானி தவறு செய்து விட்டார் என்றோ, கவனக்குறைவாக இருந்து விட்டார் என்றோ கூட முடியுமா ? கண்டிப்பாக முடியாது

அதே நேரம்
நல்ல வானிலை இருக்கும் போது, விளக்குகள் ஒழுங்காக செயல்படும் போது ஓடுதளத்தை விட்டு வேறு இடத்தில் இறக்கினால் அது பிழை

இது மருத்துவத்துறையில் மிகவும் சாதாரணம்
இதனால்தான் வசதி குறைவாக உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் பிரசவத்தை வசதி அதிகமுள்ள மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பார்க்கலாம்

அதே போல் ஒரே நோய்க்கு இரு மருத்துவர்கள் வெவ்வேறு சிகிச்சை சொல்வார்கள். இரண்டுமே சரியாக இருக்கலாம்

அது சரி
யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்திலும் கருத்து சொல்லலாமா ?
உங்கள் ஈகோவை ஓட்டை போடுவதற்கு மன்னிக்கவும்
இதற்கான பதில் “இல்லை” என்பதே ஆகும்

ஒரு விஷயம் குறித்து கருத்து கூற கீழ்க்கண்டவை அவசியம்
1. அந்த துறை குறித்த பொதுவான அடிப்படை அறிவு
2. கருத்து கூறும் குறிப்பிட்ட விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு
3. அது போன்ற விஷயங்களில் அனுபவம்
4. அந்த விஷயத்தில் நிபுணத்துவம்
5. திறமை
6. தரவு

இந்த ஆறு விஷயங்களும் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் கருத்தின் துல்லியமும், பிழையின்மையும் அதிகரிக்கும். இதில் 6 மட்டுமே இணையத்தில் ஒரே நாளில் கிடைக்கும். 3,4,5 எல்லாம் பெற பல வருடங்கள் ஆகும்.

உதாரணமாக ஒரு விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கியது என்றால்
அந்த விமானி தவறு செய்தாரா இல்லை என்று கருத்து கூற அதே விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ள மற்றொரு விமானிக்குத்தான் தகுதி உள்ளதே தவிர மற்றவர்களுக்கு தகுதி இல்லை

அரசியல் சாசனம் கருத்துரிமை வழங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அரசியல் சாசனம் வழங்கியிருப்பது பேச்சுரிமை மற்றும் நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்தும் உரிமைதானே (Freedom of Speech and Expression) தவிர உங்களுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் அடிப்படையை தெரிந்து கொள்ளாமல் அபத்தமாக கருத்து கூறும் உரிமை அல்ல

அப்படி என்றால் எந்த விஷயம் குறித்தும் பேசவே கூடாதா என்றால், பேசலாம். ஆனால் அந்த பேச்சு என்பது விருப்பம் அல்லது ஆசை என்பதில் கீழ் தான் வரவேண்டுமே தவிர கருத்து என்று கூறக்கூடாது

புயலின் போது விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கினால் விமானி ஓடுதளத்தில் இறக்கியிருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை கூறலாமே தவிர, விமானி தவறு செய்த்து விட்டார் என்ற கருத்தாக அதை கூறக்கூடாது

இது தான் கருத்திற்கும், ஆசைக்கும் வித்தியாசம்

இது என் ஆசை என்று நீங்கள் பொதுவெளியில் கூறினால் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதை உங்கள் கருத்தாக கூறினார், அந்த துறையில் நிபுணர் அதை மறுக்கலாம். அப்படி இருக்கும் போது, “இது என் கருத்து, இது அரசியல் சாசன உரிமை” என்று சண்டை போடுவது வீண்

நம்பிக்கை என்றால் என்ன ?

இது உங்களுக்குள் நீங்களே நம்பிக்கொள்வது. நம்பிக்கை நம்பிக்கையாக இருக்கும் வரை எந்த விவாதத்திற்கும் உட்பட்டது அல்ல
அதே நேரம் நம்பிக்கையை பொதுவெளியில் கருத்தாக கூறினால் விவாதம் வரும்

மேலும் சில உதாராங்களை பார்க்கலாம்

• தகவல் : தலைக்கவசம் அணிந்தால் உயிர்கள் பாதுகாக்கப்படும்
• கருத்து : தலைக்கவசம் என்பது அவசியம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை
• நம்பிக்கை : தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது

இதில் “தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்று நீங்கள் கூறினால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்ற உங்கள் விருப்பத்தை “தலைகவசம் அணியவது தேவையில்லை” என்ற அபத்த கருத்தாக கூறிவது தான் பிரச்சனை

அடுத்த உதாரணம்
• தகவல் : சச்சின் 463 ஆட்டங்களில் 18426 ஓட்டங்களும் விராட் கோலி 238 ஆட்டங்களில் 11867 ஓட்டங்களும் பெற்றுள்ளார்
• கருத்து : ஆட்டங்களின் அடிப்படையில் சச்சினை விட கோலி சிறந்த ஆட்டக்காரர்
• கருத்து : தொடர்ந்து விளையாடினால் கோலியால் சச்சினின் ஓட்டங்களை விட அதிகம் பெற முடியும்

• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்கும்
• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்காது

இதில் உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம், அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதனால் சச்சின் எடுத்த ஓட்டங்கள் கூடவோ குறையவோ செய்யாது. அதே போல் சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற பொய்யை சொல்லக்கூடாது

ஆக நம்பிக்கை என்பது உங்களூக்குள் இருக்கவேண்டியது, ஆசை என்பதை வெளியில் சொல்லலாம். இவை இரண்டும் தான் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள்

கருத்து கூற உங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் அந்த கருத்து கூற உங்களுக்கு தகுதியுள்ளதா என்பதை பரிசீலனை செய்து விட்டு கருத்து கூறினால் பிரச்சனை இல்லை. அல்லது உங்கள் விருப்பத்தை கருத்தாகவோ தகவலாகவோ திணிக்க முயன்றால் இணையத்தில் பஞ்சாயத்து வரும்

உதாரணமாக பில் கேட்ஸ் கொரோனா குறித்து கருத்து கூறுகிறார். காரணம் அவர்
• இது குறித்து படித்துள்ளார்
• பல ஆண்டுகளாக தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துகிறார்
• அந்த தரவுகளை வைத்துள்ளார்
• அதை வைத்து அவர் கருத்து கூறுகிறார்
இதுவும், வாட்சப்பில் வருவதை நம்பி பொது வெளியில் உளறி மாட்டிக்கொள்வதும் ஒன்றல்ல

ஆசை / விருப்பம் கருத்து என்பதில் சரியான ஆசை / விருப்பம், தவறான ஆசை / விருப்பம் என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் ஆசை / விருப்பம் அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
• ஒரு ஆசை / விருப்பம் – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
• வேறு ஒரு ஆசை / விருப்பம் – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

நீங்கள் என்ன ஆசை / விருப்பம் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நீங்கள் கூறும் ஆசையுடன் எக்காரணம் கொண்டும் தவறான தகவல்களை தர முடியாது உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து.

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (பொய் சொன்னால்), அது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.